இஸ்லாமியப் பொதுஅறிவு

1. ஹிஜ்ரத் என்றால் என்ன?

வாழும் நாட்டில் கொடுமை பொறுக்க முடியாமல் இறைவனுக்காக நாடு துறந்து அன்னிய நாட்டில் தஞ்சம் புகுவது.

2 . இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஸஹாபாக்கள் எந்தநாட்டில் தஞ்சம் புகுந்தார்கள்?

ஹபஸா (அபிசீனியா)

3 . ஹிஜ்ரா காலண்டர் எப்படி தொடங்கியது?

முஹம்மத்நபி(ஸல்)அவர்கள் மக்கா நகர் துறந்து, மதீனா நகர் நோக்கி ஹிஜ்ரத் சென்ற நிகழ்விலிருந்து.

4 . ஹிஜிரி (அரபி) மாதங்கள் பெயர் என்ன?

1. முதல் மாதம் முஹர்ரம்,

2. இரண்டாம் மாதம் ஸபர்,

3. முன்றாம் மாதம் ரபிவுல் அவ்வல்,

4, நான்காம் மாதம் ரபிவுல் ஆகிர்,

5, ஐந்தாம் மாதம் ஜமாஅத்துல் அவ்வல்,

6. ஆறாம் மாதம் ஜமாஅத்துல் ஆகிர்,

7. ஏழாம் மாதம் ரஜப்,

8. எட்டாம் மாதம் ஷாஃபான்,

9. ஒன்பதாம் மாதம் ரமழான்,

10. பத்தாம் மாதம் ஷவ்வால்,

11. பதினோன்றாம் மாதம் துல் கஅதா,

12. பனிரெண்டாம் மாதம் துல் ஹஜ்.

5. முஸ்லிம்களின் 3 புனித நகரங்கள் எவை?

1. புனித கஃபா ஆலயம் உள்ள மக்கா.

2. மஸ்ஜித் நபவீ இருக்கும் மதீனா.

3. மஸ்ஜித் அக்ஸா இருக்கும் பாலஸ்தீனம்.

6. உம்முல் குர்ஆன் எது?

ஸூறத்துல் ஃபாத்திஹா(ஏழு வசனங்கள்)

7. ரூஹூல் அமீன் என்பது யாருடைய பெயர்?

வானவர் தலைவர் ஜீப்ரீல் (அலை) அவர்களுடைய பெயர்

8. நபி(ஸல்) அவர்களுக்கு குர்ஆன் எத்தனை ஆண்டுகள் வஹீ மூலம் இறங்கியது?

23 ஆண்டுகள்

9. குர்ஆன் மக்காவில் எத்தனை ஆண்டுகள், மதீனாவில் ஆண்டுகள் இறங்கியது?

மக்காவில் : 13 ஆண்டுகள் , மதீனாவில் : 10 ஆண்டுகள்

10 . குர்ஆனை ஒதினால் ஒரு எழுத்துக்கு எத்தனை நன்மைகள் உண்டு?

குர்ஆனை ஒதினால் ஒரு எழுத்துக்கு 10 நன்மைகள் உண்டு. (ரமழானில் 70-நன்மைகள்-).

11. திருக்குர்ஆனை முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் யார் ?

அப்துல்ஹமீது பாகவி

12. ஸஜ்தா இல்லாத தொழுகை யாது?

ஜனாஸா தொழுகை

13. ஆரம்பத்தில் திருக்குர் ஆனை எதில் பதிவு செய்தனர் ?

எலும்பு, தோல், மரப்பட்டைகள். மேலும் நபிகளாரும், ஸஹாபாப் பெருமக்களும் மனனம் செய்து கொண்டனர்.

14 . திருக்குர்ஆனின் முதல் வசனம் எது ?

'இக்ரஹ் பிஸ்மிரப்பிக்கல்லதி ஹலக்' (அல் குர்ஆன் 96 : 1)

15. நபி (ஸல் ) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது இறங்கிய இறை வசனம் எது?

'அல்யவ்ம அக்மல்து லகும் தீனகும் வ அத்மம்து' என துவங்கும் வசனமாகும்(5:3)

16. உலகின் இறுதி நபி யார் ?

உலகின் இறுதிநபி முஹம்மத்(ஸல்) அவர்கள்

17. மைக்கேல் ஹார்ட் எழுதிய The 100 என்ற ஆய்வு நூலில், எல்லாருக்கும் முதன்மையாக, தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார் ?

முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

18. குர் ஆனில் அதிகம் பெயர் கூறப்பட்ட நபி யார் ?

நபி முஸா (அலை)

19. இறுதி நாளின் அடையாளமாக, வானிலிருந்து இறங்கிவரக்கூடிய நபி யார் ?

நபி ஈஸா (அலை)

20. திருக் குர் ஆனில் பெயர் கூறப் பட்ட ஒரே பெண்மணி யார் ?

நபி ஈஸா(அலை) அவர்களின் தாய் மரியம் (அலை).

21. திருக் குர் ஆனில் ஒரு இடத்தில் மட்டும் வரும் நபித் தோழரின் பெயர் என்ன ?

ஜைது (ரலி) ( அல் குர்ஆன் 33 : 37)

22. ஹதீஸ் கிரந்தங்கள் சிலவற்றின் பெயர் கூறு?

புஹாரி, முஸ்லிம், இப்னுமாஜா, திர்மிதி, முஸ்னத் அஹ்மத், நஸயீ

23. எந்த கலீஃபாவின் ஆட்சியில், ஸ்பெயினில் இஸ்லாம் பரவியது?

கலிபா உஸ்மான் (ரலி)

24. பிலால்(ரலி) அவர்களை அடிமைத் தனத்திலிருந்துமீட்டவர் யார் ?

அபு பக்கர் (ரலி) அவர்கள்

25. முதலில் இஸ்லாத்தை தழுவிய சிறுவர் யார் ?

அலி (ரலி) அவர்கள்.

26. இஸ்லாமிய வரலாற்றில் முதல் பெண் உயிர் தியாகியின் பெயர் என்ன ?

அன்னை சுமையா (ரலி) அவர்கள்.

27. இறைவனின் வாள் என்று அழைக்கப் பட்ட நபித்தொழர் யார் ?

காலித் பின் வலீத்(ரலி)

28. தாங்கள் வழி நடத்திச் சென்ற அனைத்து போர்களிலும், வெற்றி ஈட்டிய நபித் தொழர் யார் ?

காலித் பின் வலீத் (ரலி)

29. வியாபாரிகள் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கேள்விப் பட்டு இஸ்லாத்தை ஏற்ற கேரள மன்னர் யார் ?

மன்னர் சேரமான் பெருமாள்-அப்துர் ரஹ்மான்

30. நாம் பிறந்து வளர்ந்து மடியும் எல்லா விஷயங்களும் எழுதப்பட்டு வானில் உள்ள மூலப்பதிவேட்டின் பெயர் என்ன ?

லவ்ஹூல் மஹ்ஃபுள்

31. மனிதனின் வலப்புறமும், இடப்புறமும் இருந்து நன்மை, தீமைகளை எடுத் தெழுதும் வானவர்கள் பெயர் என்ன ?

கிராமன் - காத்திபீன்

32. ஒரு நற்செயலை செய்தால் எத்தனை மடங்கு நன்மைஉண்டு ?

10 மடங்கு நன்மை உண்டு.

33. மறுமையில் ஒரு நாளின் அளவு என்ன ?

உலகின் ஆயிரம் ஆண்டுகள் (காண்க அல்குர்ஆன் 22 : 47)

34. அல்லாஹ் - அளவற்ற அருளாளன்

35. திருக்குர்ஆன் - இறைவேதம்

36. குர்ஆனின் முதல் வசனம் இறங்கிய இடம்?

ஹிரா குகை

37 அல்லாஹ்வுவை வணங்குவதற்காகமுதலில் ஆதம் (அலை)அவர்களால் கட்டப்பட்டு பிறகு இப்ராஹீம் (அலை)அவர்களால் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பள்ளிவாயில் யாது ?

மக்காவிலுள்ள கஃபா

38. கலிபா என்பவர் யார்?

இஸ்லாமிய ஆட்சியாளர்

39. ஸஹாபாக்கள் எனப்படுவோர் யாவர்?

நபி(ஸல்) அவர்களின் தோழர்கள்

40. ஈத் அல் பித்ர் என்றால் என்ன?

புனித ரமழான் மதத்தின் இறுதியில் வரும் பெருநாள்

41. ஈத் அல் அத்ஹா என்றால் என்ன?

தியாகத்திருநாள் - ஹஜ்ஜூப் பெருநாள்

42. சுன்னா என்றால் என்ன?

நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கை வழிமுறை சொல், செயல், அங்கிகாரங்களுக்கு சுன்னா எனப்படும்.

43. ஸலாத் என்றால் என்ன?

தொழுகை

44. ஸஜ்தா என்றால் என்ன?

தொழும் போது தலையை குனிந்து நெற்றியை பதிக்கும் முறை

45. சூரா என்றால் என்ன?

குர்ஆனின் பாகம்

46. ஷிர்க் என்றால் என்ன?

அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்

47. ஸவ்ம் என்றால் என்ன?

நோன்பு

48. வித்ர் என்றால் என்ன?

இரவில் தூங்குவதற்கு முன் இறுதியாகத் தொழும் தொழுகை

49. வுளு என்றால் என்ன?

தொழுகைக்கு முன் நீரால் முகாம் கை கால் போன்ற உடல் உறுப்புகளை சுத்தம் செய்வது

50. தக்வா என்றால் என்ன?

இறையச்சம்

51. தவ்பா என்றால் என்ன?

பாவ மன்னிப்பு

52. புர்கான் என்றால் என்ன?

திருக்குர்ஆனின் மற்றுமொரு பெயர் - பிரித்தரிவித்தல் என்று பொருள்.

53. தீன் என்றால் என்ன?

அல்லாஹ்வின் மார்க்கம்

54. தூஆ என்றால் என்ன?

இறைவனிடம் உதவி கேட்டு பிராத்தனை புரிவது

55. பாங்கு என்றால் என்ன?

தொழுகைக்கான அழைப்பு

படைத்தவனிடம் பாவமன்னிப்பு தேடுவோம்

அல்லாஹ் தனது திருமறையில் 48:2 வசனத்தில் முஹம்மது (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்களை மன்னித்து விட்டதாகக் கூறுகின்றான். இப்படியொரு பாக்கியத்தைப் பெற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றாடம் பாவம் செய்து கொண்டிருக்கவில்லை. ஆனால் அதே சமயம் அன்றாடம் பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருந்தார்கள்.

“அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’ (பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6307

“எனது உள்ளத்தில் கவனக்குறைவு ஏற்படுகின்றது. நிச்சயமாக நான் அல்லாஹ்விடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி), நூல் : முஸ்லிம் 4870

“மக்களே! அல்லஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள். நான் அவனிடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி), நூல் : முஸ்லிம் 4871

எப்போதும் இறைச் சிந்தனையில் இருக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உள்ளம் கொஞ்சம் அந்தச் சிந்தனையை விட்டு விலகினால் கூட அதற்காக பாவமன்னிப்பு தேடுகின்றார்கள். ஆனால் நாம் சிறு சிறு பாவங்களால் முற்றுகையிடப்பட்டுள்ளோம். அன்றாடம் ஆயிரக்கணக்கான பாவங்களைச் செய்து விட்டு கல்லாக உட்கார்ந்திருக்கின்றோம். அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவது கிடையாது. ஒரு மாதிரியான மிதப்பில் இருக்கின்றோம். இது போன்ற பாவங்களை விட்டு விலகுவதுடன் அன்றாடம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடி அதற்குரிய பலன்களை அடைய வேண்டும்.

வேதனையை விட்டும் பாதுகாவல்

(முஹம்மதே!) நீர் அவர்களுடன் இருக்கும் போது அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பவனாக இல்லை. அவர்கள் பாவ மன்னிப்புத் தேடிக் கொண்டிருக்கும் போதும் அவர்களை அல்லாஹ் தண்டிப்பவனாக இல்லை. (அல்குர்ஆன் 8:33)

பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தண்டனை இறங்காது என்பதை இந்த வசனம் உணர்த்துகின்றது.

மக்கள் செல்வமும், மழை நீர் வளமும்

உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான். உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான். செல்வங்கள் மூலமும், மக்கள் மூலமும் உங்களுக்கு உதவுவான். உங்களுக்காக சோலைகளை ஏற்படுத்துவான். உங்களுக்காக நதிகளையும் ஏற்படுத்துவான். (அல்குர்ஆன் 71:10-12)

அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடினால் அவன் மழை, செல்வங்கள், மக்கள் ஆகியவற்றைக் கொண்டு நமக்கு உதவுவான் என்பதை இந்த வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

ஸஹர் நேரத்தில்…

அவர்கள் இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள். (அல்குர்ஆன் 51:18)
(அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுவோராகவும், (இறைவனுக்கு) கட்டுப்பட்டோராகவும், (நல் வழியில்) செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரத்தில் பாவ மன்னிப்புத் தேடுவோராகவும் (இருப்பார்கள்.)

(அல்குர்ஆன் 3:17)

இந்த வசனங்களில் இறை நம்பிக்கையாளர்களின் பண்புகளைப் பற்றி சொல்லும் போது, ஸஹர் நேரத்தில் அவர்கள் பாவமன்னிப்பு தேடுவார்கள் என்று வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்த வசனங்களுக்கு விளக்கமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இரவின் பிற்பகுதியில் பாவமன்னிப்பு தேடுவதை வயுறுத்தியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கின்றேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கின்றேன்” என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 1145

சுவனத்தைப் பெற்றுத் தரும் ஸய்யிதுல் இஸ்திஃக்ஃபார்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“அல்லாஹும்ம அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கலக்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க. வ வஃதிக்க மஸ்ததஃத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஃத்து. அபூஉ லக்க பி நிஃமத்திக்க அலைய்ய வ அபூஉ லக்க பி தன்பீ. ஃபஃக்ஃபிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த.” (பொருள் : அல்லாஹ்வே! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமையாவேன். நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதிமொழியையும், வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு கோருகின்றேன். நீ (எனக்கு) அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கின்றேன். நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் ஒப்புக் கொள்கின்றேன். ஆகவே. என்னை நீ மன்னிப்பாயாக. ஏனெனில் பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை.)

என்று ஒருவர் கூறுவதே தலை சிறந்த பாவமன்னிப்பு கோரல் (ஸய்யிதுல் இஸ்திஃக்ஃபார்) ஆகும். யார் இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும், தூய்மையான எண்ணத்தோடும் பகல் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறந்து விடுகின்றாரோ அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். யார் இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டு, காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகின்றாரோ அவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.

அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி), நூல் : புகாரி (6306)

தொழுகையில் ஸலாம் கொடுத்ததும்…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பும் போது மூன்று தடவை (அஸ்தஃக்ஃபிருல்லாஹ் என்று) பாவமன்னிப்பு தேடுவார்கள்.